ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு திருச்சிக்கு போய்விட்டு திரும்ப வருகையில், தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்று வரலாம் என தோன்றியது. மனம் மிகவும் துவண்டுபோயிருந்தது. திருச்சிக்கு போன காரியம் முடியவில்லையே என்ற வருத்தம். கோவிலுக்கு சென்று வந்தால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம்.
தஞ்சை பெரியகோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. ரொம்ப பிரசித்தமான கோவில். இவற்றை தாண்டி வேறெதுவும் தெரியாது (அதற்காக பின்னாளில் நான் வருத்தமடைந்தேன்). உள்ளே சென்றதும் கோவிலின் பிரம்மாண்டம் வியக்க வைத்தது. மூலவர் சந்நிதிக்கு சென்று பார்த்தபோது தான் பெருவுடையார் கோவில் என்று சொல்வது எவ்வளவு பொருத்தமானது என தோன்றியது. மிகமிக பெரிய சிவலிங்கத்தை பார்த்ததும் "சிவ சிவா, நமசிவாயா, எம்பெருமானே" என என்னென்னவோ பெயர்களை மனம் சொன்னது. மனம் ஒன்றி பிரார்த்தித்தேன்.
"இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும்
உன் கழல் தொழுதெழுவேன்.
கடலினில் கலந்த அமுதொடு நஞ்சை
மிடரினில் அடக்கிய வேதியனே"
"நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே" உள்ளுக்குள் இழுபறியாய் இருக்கும் காரியம் முடியவேண்டுமென வேண்டிக்கொண்டு கிளம்பி வந்துவிட்டேன். கோவிலின் கட்டிடங்களையும், சிற்பங்களையும் நிதானித்து பார்க்கவில்லை.
வீட்டிற்கு வந்ததும் எந்த காரியம் முடியாமல் இழுத்து கொண்டிருந்ததோ அதற்கான பேப்பர்களை எடுத்து பார்த்துகொண்டிருந்த போது அந்த நிமிடம் வரை புரியாமல் இருந்த ஒரு வரைபடம் அந்த ஒரு நொடியில் பொட்டில் அடித்தாற் போல் புரிந்து விட்டது. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருந்த விஷயம் அன்று புரிந்து அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் அந்த வேலை முடிந்துவிட்டது. ஒரு உதாரணத்திற்கு இந்த சம்பவத்தை கூறினேன். ஆனால் ஒவ்வொருவரும் அதை அனுபவிக்கும் போதுதான் முழுமையாக உணர முடியும்.
தஞ்சை பெரியகோவிலை இதுவரை பார்க்காதவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று பார்த்துவிடுங்கள். செல்வதற்கு முன் கோவிலை பற்றி ஓரளவாவது படித்து தெரிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் கொஞ்சமாவது அனுபவித்து ரசிக்க முடியும். ராஜராஜசோழனால் ஆறில் இருந்து ஏழு ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்கப்பட்டதாக ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், ஆறு வருடங்கள் என்பது குறுகிய காலமே. அதற்குள் இப்படி ஒரு கோவிலை கட்ட முடிந்தது மிகப்பெரிய ஆச்சரியம். அந்தளவிற்கு எல்லோரும் உழைத்திருக்கிறார்கள். அதனை சுற்றி பார்க்க கூட நாம் செல்லாமல் இருக்கலாமா?.
சிலர் ராஜராஜசோழரை புகழ்வார்கள். இன்னும் சிலரோ இது சிவனே சிவனுக்காக கட்டிக்கொண்ட கோவில் என்றும், ராஜராஜரை இறைவன் கருவியாக பயன்படுத்தி கொண்டார் எனவும் சொல்வர். எது எப்படியோ தஞ்சை பெருவுடையார் ஒரு பொக்கிஷம் என்பது மட்டும் நிஜம்.
- இராஜ்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக